கிழக்கிலங்கையின் தமிழர் ஆட்சியும் மீனாட்சி அம்மன் ஆலய வரலாறும்

  நாலா பக்கமும் களணிகளால் சூழப்பட்ட பிரமாண்டமானதோர் ஆல விருட்சத்தின் கீழ் கம்பீரத்துடன் காட்சியளிக்கும் ஸ்ரீ மடத்து மீனாட்சி அம்மன் ஆலயம், பல நூறு வருடங்கள் பழம் பெருமை வாய்ந்தது இலங்கைத் தீவை ஆக்கிரமித்து ஆட்சி புரிந்த மேலை நாட்டவர்களின் ஆதிக்கத்திற்கு முன்னரே இவ்வாலயம் தோன்றியது என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன பழய கல்வெட்டுக்களில் கண்ணுற்று நோக்குகையில் இதன் தோற்ற வரலாறும், கிழக்கிலங்கையின் தமிழரின் செங்கோலாட்சிச் சிறப்பும் நன்கு விழங்கும்.

    தற்காலம் அட்டப்பள்ளம், என அழைக்கப்படும் இடம் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் "சிங்கார புரி" என அழைக்கப்பட்டது. இச் சிங்கார புரியை இராசதானியாக கொண்டே பழம்பெரும் தமிழ் மன்னன் "வன்னியராச சிங்கன்" இப் பகுதி முழுவதையும் ஒரு குடையின் கீழ் ஆட்சி புரிந்தான் தெய்வ பக்தி மிக்க இம் மன்னன் பல தேவாலயங்களைக் கட்டி எழுப்பினான் அதில் ஒன்றே இவ் மீனாட்சி அம்மன் ஆலயம் ஆகும்.

    வன்னியராச சிங்க மன்னனின் மனைவியின் பெயர் "கோதை" என்பதாகும் இவ்விளவரசி அழகில் சிறந்தவள் அவன் அரண்மனை இருந்த இடம்தான் அழகாபுரி என அழைக்கப்பட்டது. இவ்விளவரசி உல்லாசமாக பவனி வந்த இடமே கோதையார் மேடு என அழைக்கப்பட்ட பகுதி இந்த அழாகாபுரி நகரில் பல கிணறுகள் , மடங்கள், சுமைதாங்கிகள் பல கட்டிடங்களை எழுப்பி இருந்தான் இன்றும் கூட "சுமைதாங்கியடி" என அழைக்கப்படுவது நோக்கத்தக்கது. அரசனுக்கு உரித்தான மாட்டுப்பட்டி மற்றும் கறவை இனங்கள் மேய்த நிலப்பிரதேசம் ஆகும். இன்றும் கூட அப் பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகின்றது. மன்னனது பாசறைப் படையனிகள் நிறுவப்பட்ட பிரதேசம்தான் "செங்கண்படை" என அழைக்கப்பட்டது. பின்னார் அது மருவப் பட்டு "செங்கட்படையாக" தற்போது உள்ளது.


    வன்னியராச மன்னன் இப்பகுதி பூராகவும் ஆண்டான் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன இன்று அட்டப்பளத்தில் உள்ள மாரிய அம்மன் கேயிலுக்கு "சிங்காபுரி மாரியம்மன் கோவில்" என்ற பெயரே வழங்கப்படுகிறது மீனாட்சியம்மன் ஆலயமும் ,இவ்வரசனால் பரிபாலிக்கப்பட்டது என்பதற்கு , அம்மனைப்பற்றிய பல காவியப் பாடல்கள் எடுத்துக்காட்டாக உள்ளன.

    பாடல் - 01

            ஆலயம் வந்தது ஐநூறு வருடமென்று
        அறிவுளோர் சுவடியில் போட்டிருந்தார்கள்
            பால்போல மனதுடைய சோளராச வன்மை
        இப் பகுதி முழுவதும் ஆண்டு வரும் நேரம்
            காலத்திற்கேற்றாற் போல் மீனாட்சி அம்மனை
        கனவு கண்டது போல கட்டினான் கோயில்
            வால மீனாட்சி நீ காரென்று சொல்லியே
        மனது சந்தோசமாய் ஆண்டு வந்தேனே ! 


    பாடல் - 02
           
        மடலவிள மலர் மார்பழகி
        மதுராபுரிதனில் வந்த ரண சூலி
        படை வரை சபை மிகு பல்லிய முழக்கமுறு
        மடத்து மீனாட்சியென வந்த பத்தினியே


    இவ்வாறாக தமிழ் மன்னன் நீதி பிறழாமல் கட்டியாண்ட தமிழ்ப் பிரதேசம் கலத்தின் சுழற்சியினால் அன்னிய சமுகத்தினரால் பறிக்கப்பட்டு சூறையாடப்பட்டாலும் கூட தூர்ந்து போன கட்டிட இடிபாடுகளும் பழய இலச்சினைகளும் திரிவு பெற்று வழங்கி வருகின்ற பெயார்களும் பல நூறு வருடம் தமிழன் ஆண்ட பிரதேசம் என்பதை வலியுறுத்தி நிற்கின்றது.